Thursday, June 14, 2007

மகிழ்வின் ஒரு கணம்

மூலம் - ஜலாலுத்தீன் ரூமி
தமிழில் - ராகவன் தம்பி

ஒரு தாழ்வாரத்தில்
தேகம் இரண்டும்
ஜீவன் ஒன்றாகவும்
கூடிச் சுகித்து
அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்.

ஊற்றெடுக்கும் உயிராய்
சலசலக்கும் நீரோட்டத்தில்
பறவையின் பாடல்களில்
உணர்கிறோம் நம்மை நாம்
இத்தோப்பின் வனப்பாய்
நீயும் நானும்.

நம்மைக் கண்காணிக்கும்
நட்சத்திரங்களுக்கு நாம் காட்டுவோம்
மெல்லியதோர் பிறைநிலவாய்த்
திகழ்வது என்னதென்று.

அசைபோடும் ஊகங்களை
உதறச் செய்து
நம்மை மறந்து
நம்மோடு ஒன்றாய்
இணைந்திருப்போம்
நீயும் நானும்.

ஓருருவாய் ஓர்குரலாய்
ஓரிணையாய் நம் சிரிப்பொலிக்க
தூவட்டும் சொர்க்கத்தின் கிளிகள்
இனிமையை சர்க்கரையாய்
இப்பூமியிலும்
காலம் மறந்துபோன
இனிய நிலங்களிலும்.

No comments:

Post a Comment