Tuesday, June 19, 2007

தொழிற்சங்கங்கள் தந்த சிங்காரவேலர்...

ராகவன் தம்பி
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 03 பிப்ரவரி 2007 அன்று நடைபெற்ற "தடம் பதித்த தமிழர்கள்" தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
வாழ்ந்த காலத்திலேயே திரு,வி.க., ஜீவா, ராஜாஜி, அண்ணாதுரை போன்றவர்களால் மறைக்கப் பட்ட மாமேதை என்று விளிக்கப்பட்டவர் ம.சிங்காரவேலர். இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வே.ராவுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பல நிலைகளில் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இந்திய தேசிய விடுதலைக்கான முன்னணி வீரர்களில் ஒருவர். பொதுவுடமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் முன்னணி வகித்தவர். தொழிற்சங்க சிந்தனைகளை இந்தியாவில் விதைத்த சிந்தனைப் போராளி. தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப் பள்ளியின் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராஜருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தொழிலாளர்களின் மேன்மையை உணர்த்தி உழைப்பாளர் தினத்தை இந்தியாவில் - ஏன் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கொண்டாடி மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் தினமாக அறிவித்து வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் உழைப்பாளி, இயக்கத்தவர்களை -காம்ரேட் என்று முதன் முதலாக அழைத்தவர் சிங்காரவேலர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர்.
பாரதிக்கு உற்ற நண்பராக விளங்கியவர். அந்த மகாகவி இவர் மடியில் படுத்து உயிர் துறந்திருக்கிறான்.
"சிங்காரவேலு செட்டியார் எனக்கு ஆசிரியர் - நான் அவரது மாணவன்'' என்று திரு.வி.க அவர்களால் போற்றப்பட்டவர் சிங்காரவேலர்.
தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெற வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டத்துக்குப் பின் சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.
இப்படிப் பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த சிங்காரவேலர் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18ம் நாள் மயிலாப்பூர் வெங்கடாசலம் செட்டி -வள்ளியம்மை ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவருடைய பாட்டனார் கந்தப்பச் செட்டி சென்னை நடுக்குப்பம் பகுதியில் நாட்டாண்மைக் காரராக இருந்து அந்தப் பகுதியில் மேலாண்மை மிக்கவராக விளங்கினார். உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கட்டுமரங்களைத் தருவித்து வாணிபம் செய்து அவற்றை வாடகைக்கு விட்டும் பெரும் பொருள் ஈட்டினார். சிங்காரவேலரின் தந்தையார் இந்த வியாபாரத்துடன் பர்மாவிலிருந்து தேக்கு மரத்தையும் அரிசிûயுயம் தருவித்து வணிகம் செய்தார். இவர்களுடைய குடும்ப அறக்கட்டளை பல அறப்பணிகளை செய்து வந்தது.
சிங்காரவேலருக்கு வழங்கும் பெயர்களாக நுôலாசிரியர்கள் பலவிதமாகக் குறிப்பிடுகிறார்கள். சிங்காரவேல் செட்டியார் என்றும் சிங்காரவேலனார் என்றும் ம.வே.சிங்காரவேல் என்றும் ஒவ்வொருவிதமாகக் குறிப்பிடுகிறார்கள். சிங்காரவேலர் தாம் எழுதிய நுôல்களில் தன் பெயரை ம.சிங்காரவேலு என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் மயிலாப்பூரை வாழ்விடமாகக் கொண்டிருந்ததால் தங்கள் பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரை முதலெழுத்தாகக் கொள்ளாமல் மயிலாப்பூரைக் குறிப்பிடும் ம என்னும் எழுத்தையே தன் முதலெழுத்தாகக் கொண்டுள்ளார். பம்மல் சம்மந்த முதலியார் போல இவர் மயிலாப்பூர் சிங்காரவேலு என்று பெயரைக் கொண்டுள்ளார்.
தொடக்கக் கல்வியை முடித்த பின் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்து 1881ம் ஆண்டு மெட்ரிக்குலேசன் தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சேத்துப்பட்டு கிறிஸ்துவக் கல்லுôரியில் 1884ம் ஆண்டு எஃப்.ஏ.பட்டமும் சென்னை மாநிலக்கல்லுôரியில் பி.ஏ. பட்டமும் பெற்று சிறிது காலம் குடும்ப வாணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பர்மா டிரேடர்ஸ் என்னும் பெயரில் பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து அதனை லண்டனுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினார். பின்னர் சிறிது ஆண்டுகள் கழித்து சென்னை சட்டக் கல்லுôரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். பின்னர் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டார்.
வியாபார நிமித்தமாக சிங்காரவேலர் லண்டன் சென்றபோது அங்க உலக புத்தமத மாநாடு ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் அவர். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பே 1889ம் ஆண்டில் புத்தரின் 2443வது மறைவு ஆண்டு விழாக்கூட்டம் ஒன்றை தமது இல்லத்திலே நடத்தியிருந்தார். புத்தரின் சிந்தனைகள் சிங்காரவேலரை வெகுவாக ஆக்கிரமித்து இருந்தன. பின்னாளில் அவருடைய பொது வாழ்க்கையில் ஒரு பார்வையை அமைத்துக் கொள்ள அவருக்கு அச்சிந்தனைகள் பெருமளவுக்கு உதவியிருக்கின்றன. 19ம் நுôற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் புத்தரின் பகுத்தறிவு நெறிக்குப் புத்துயிர் தரும் முயற்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக முழங்கினார் அயோத்தி தாசப் பண்டிதர். அயோத்திதாச பண்டிதரின் வழிகாட்டுதலை ஏற்று சென்னை-இராயப்பேட்டையில் அவர் முதன்முதலாகத் தோற்றுவித்த மகாபோதி புத்த சங்கத்தின் கிளையைத் தனது இல்லத்திலும் நிறுவினார் சிங்காரவேலர்.
இந்த நேரத்தில் திருவிக போன்ற இளைஞர்கள் சிங்காரவேலரை சந்திக்கின்றனர். திருவிக தன்னுடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் "கூர்தல் அறத்தை (எவொல்யூஷன் தியரி) டார்வின் ஆராய்ச்சி கொண்டு முதன் முதலில் எனக்கு அறிவுறுத்தியவர் தோழர் சிங்காரவேல் செட்டியார் ஆவர். லட்சுமணராசு நாயுடுவும் சிங்காரவேல் செட்டியாரும் பௌத்த மதப் பிரச்சாரம் செய்வர். அதற்கு அரணாக அவரால் விஞ்ஞானக் கலைகள் போதிக்கப்படும். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கண்ட உண்மைகளையும் பிறர் கண்ட நுட்பங்களையும் அறிவுறுத்தும் தொழிலில் ஈடுபட்டார். அத்தொண்டு என் போன்றோருக்குப் பெரும் பயன் விளைவித்தது என்றும், இன்னொரு இடத்தில், யான் டார்வின் வகுப்பு மாணாக்கனானேன். செட்டியார் ஆசிரியர் ஆனார். டார்வின் கொள்கை எனது பின்னைய சமய ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று'' என்று எழுதியிப்பார்.
வழக்கறிஞராகத் தொழில் புரிந்த காலகட்டத்தில் பல துறைகளிலும் நாட்டம் செலுத்தி வந்திருக்கிறார். அந்த நேரத்தில் சமூக நலப்பணிகளில் அவருடைய ஆர்வம் அதிகரிக்கிறது. ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவிகள் வழங்குதல் எனப் பல பிரிவுகளாக அவருடைய சமூகப் பணி விரிவடைகிறது. பல அரசியல் தலைவர்களுடன் சிங்காரவேலருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பாரதி, வி.சக்கரைச் செட்டியார், வ.உ.சிதம்பரம் போன்றோருடன் அவருக்குப் பழக்கமேற்பட்டது. பாரதியாரின் நெருங்கிய குடும்ப நண்பர் ஆனார் சிங்காரவேலர். பல நேரங்களில் பாரதிக்குப் பொருளுதவியும் அவர் செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் வங்கப் பிரிவினையை அடுத்து 1906ம் ஆண்டளவில் அதற்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் கிளர்ச்சியும் இந்தியாவில் சுதேசிய இயக்கம் வளர்ச்சியடைந்து வருவது போன்ற அனைத்தையும் சிங்காரவேலர் கூர்ந்து கவனித்து வந்தார்.
1905ல் ஜார் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சி பற்றியும் பம்பாயில் நடந்த ஒரு தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும் 1908ம் ஆண்டு இறுதியில் தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஓர் ஆலையில் (கோரல் மில்) தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போன்ற சம்பவங்கள் - தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய தலைவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டது - தேசியக் கப்பல் கம்பெனியை துவக்கியதற்காக வ.உ.சியைக் கைது செய்து சிறையிலடைத்து அவரை செக்கிழுக்க வைத்தது, அரவிந்தரைக் கைது செய்து விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்தது,- பாலகங்காதரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது போன்றவை சென்னை வாழ் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தீவிர தேசியப் போக்கை வளர்த்தன.
பாரதி அந்தப் போக்கினை வெகுவாகப் பிரதிபலித்தார். இந்தியா பத்திரிகையில் இந்த விஷயங்களை வெகுவாகக் கண்டித்து கட்டுரைகள் வரைந்தார். பாரதியாரின் கட்டுரைகள் சிங்காரவேலருக்குப் பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அன்னி பெசண்ட் அம்மையாரையும் சந்தித்தார் சிங்காரவேலர். 1917ல் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னைச் இணைத்துக்கொண்டு தீவிரமாகப் பணிபுரியத் துவங்கினார். அப்போது காங்கிரஸ் இயக்கத்தால் நிறுவப்பட்ட சென்னை மாகாண சங்கம் என்னும் அமைப்பில் பெரியார், கேசவப்பிள்ளை, சல்லா குருசாமி செட்டியார், நாகை பக்கிரிசாமி, சீர்காழி சிதம்பரநாத முதலியார் ஆகியோர் இருந்தனர். இந்த அமைப்பின் கூட்டத்தின் போதுதான் பெரியாரை சந்தித்து இருக்கிறார் சிக்காரவேலர்.
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர் இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாடவைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918ல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப்பங்கு வகித்தார் சிங்காரவேலர். பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு உண்ணுவது போலாகும் என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
1919ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் வெறியாட்டத்தைத் தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் சிங்காரவேலர். அவர் ஏற்பாடு செய்த கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக் கடைக்காரர்களும் இறைச்சிக் கடைக்காரர்களும் கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதமாக தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக் கோட்டினை தெருவில் எரித்து வழக்கறிஞர் தொழிலை பகிஷ்காரம் செய்தார்.1920ல் நிகழ்ந்த இவருடைய துணைவியார் அங்கம்மாளின் மரணம் மிகப்பெரும் இடியாக அமைந்து சிங்காரவேலரைப் பலகாலம் நிலைகுலைய வைத்தது. உத்தரபிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்னும் சிற்றுôரில் விவசாயக்கூலிகள் நடத்திய ஒரு ஊர்வலத்தின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊர்வலத்தினர் போலீசைத் திருப்பித் தாக்கிக் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தனர். சில காவலர்களையும் வெட்டிக்கொன்றனர். தம் இயக்கத்தில் எந்த வன்முறையும் கூடாது என்று கூறி ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தி வைத்தார். இச்சம்பவம் தொடர்பான சௌரி சௌரா வழக்கு சென்னையில் நடைபெற்றது. அந்த வழக்கின் முடிவில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியது சரியில்லை என்று நினைத்தார் சிங்காரவேலர். இது குறித்து மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளேட்டில் எழுதினார். காந்திக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதினார்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் கன்னாட் பிரபுவின் வருகையை ஒட்டிய எதிர்ப்புப் போராட்டங்களை சென்னையில் மிகவும் வெற்றிகரமாக நடத்தினார் சிங்காரவேலர். 1922ம் ஆண்டு கயாவில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தம் உரையை நிகழ்த்தும்போது கூ.ட்டத்தினரை காம்ரேட்ஸ் என்று அழைத்தார். காம்ரேட்ஸ் என்கிற வார்த்தையை இந்தியாவில் முதன்முதலாக உபயோகித்தவர் சிங்காரவேலரே ஆவார். அந்த விநாடி முதல் கயாவிலிருந்து அவர் புறப்படும்வரை ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தோழர்களால் காம்ரேட் என்றே அழைக்கப்பட்டாராம்.
1921ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் முழுமையான பொதுவுடமை இயக்கம் வேரூன்றுவதற்குக் காரணமாக இருந்தார். அந்த ஆண்டில்தான் அவர் கம்யூனிஸ்டு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கேயை சந்திக்கிறார். இவர்களை தொடர்பு கொள்ள வைத்தவர் எம்.என்.ராய். பொதுவுடைமை இயக்கத்தைப் பொறுத்த அளவில் எம்.என்.ராய் அவர்களை ஒரு ஆசானாகக் கருதினார் சிங்காரவேலர். இவர்களுடைய தாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாகத் தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் இவருக்குத் தோளோடு தோளாக நின்று துணை புரிந்தனர்.
இந்திய மக்களின் பொருளாதார விடுதலையை முன்னிறுத்தி சென்னை நகரில் சென்னை தொழிலாளர் சங்கம் என்னும் தொழிற்சங்கம் ஒன்றை அவர் தொடங்கினார். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் ஆகும்.அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எம். இரயில்வே தொழிலாளர் யூனியன், மின்சாரத் தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் இரயில்வே தொழிலாளர் யூனியன், கோவைநகரத் தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், ரிக்ஷா ஓட்டிகள் சங்கம், கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களையும் தொடங்கி வைத்து பல வேலை நிறுத்தங்கள், மறியல் போராட்டங்கள் ஆகியவற்றுக்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுத்தார். இச்சங்கங்களைத் தொடர்ந்து பம்பாய், கல்கத்தா, கான்பூர், நாக்பூர் முதலிய இடங்களிலும் தொடர்ச்சியாகத் தொழிற்சங்கங்கள் தோன்றின.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் மிகவும் தீவிரத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியார் ரஷ்யா நாட்டுப்பயணம் மேற்கொள்வதில் பெரும் துணையாக நின்றார். குடியரசு இதழ் ஆசிரியப் பொறுப்பினையும் சிறிது காலம் ஏற்றார் சிங்காரவேலர். சில இடங்களில் பெரியாருடன் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தும் அந்த நட்பு இறுதி வரை தொடர்ந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6, -13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இந்தத் தேசிய வாரம் ஏப்ரல் 13ம் நாளன்று சென்னைக் கடற்கரையில் நடைபெறும் கூட்டத்தோடு முடியும். சிங்காரவேலரும் அவருடைய தொண்டர் படையும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக பாரதியின் பாடல்களைப் பாடிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடிய தோழர்கள் டாங்கே, முசாபர் அகமத், சிங்காரவேலர், நளினி குப்தா, எம்.என்.ராய் ஆகியோர் மீது 1924ல் கான்பூர் சதிவழக்கு ஜோடிக்கப்பட்டு கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மிகவும் உடல் குன்றிய நிலையில் படுத்திருந்த சிங்காரவேலரைக் கைது செய்ததை அனைத்துத் தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்ததால் அவர் மீது இருந்த சதி வழக்கை அரசு திரும்பப் பெற்றது.
1925ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ய கட்சியின் சார்பில் 13வது வட்டம் யானைக் கவுனி பகுதியில் இருந்து மிக அதிகமான வாக்குகள் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் பிடிவாதமாகத் தமிழிலேயே பேசினார். நகரசபைக் கூட்டங்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்று போராடினார். அரசு அலுவல்களில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் சிங்காரவேலரே ஆவார். அவர் இந்தி மொழியை எதிர்க்காது மொழித் திணிப்பை எதிர்த்தார். தனிப்பட்ட முறையில் ஜெர்மன் பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் இந்தியும் கற்றுக் கொண்டார்.
பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒருவேளைப் பகல் உணவினை வழங்கிடும் திட்டத்தை அவர் நகரசபைக் கூட்டத்தில் (1925) எடுத்துரைத்து அதை அமுல்படுத்த வைத்தார். இத்திட்டமே பிற்காலத்தில் காமராஜர் தமிழகம் முழுமைக்கும் அமுல்படுத்த வழிவகுத்துக் கொடுத்தது. சென்னை நகரசபையில் காந்தியின் படத்தை வைக்கும் பிரச்னையில் தீவிரமாக ஈடுபட்டு கோரிக்கையில் வெற்றி பெற்றார். அவருடைய வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் பல மாநகராட்சிகளிலும் பஞ்சாயத்து மன்றங்களிலும் காந்தியின் படம் இடம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு அனைத்து அரசு அலுவலகங்களிலும் காந்தியின் படத்தினை வைக்க ஒரு முன்னோடியாக அமைந்தது.
1888ம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று சிகாகோவில் மாபெரும் கூட்டம் ஒன்று கூடியது. அக்கூட்டத்தில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று ஒருமுகமாக எல்லோரும் பேசினார்கள். காவல்துறையும் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளும் அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். அந்த நாளே மே தினம் என்று அழைக்கப்பட்டது. 1923ம் ஆண்டு சிங்காரவேலர் சென்னையில் இரண்டு இடங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதுவே இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் தொழிலாளர் தினக் கொண்டாட்டமாகும். அந்த நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை பல ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. மே தினத்தின் முக்கிய அம்சமாக அவர் சென்னை கடற்கரை மைதானத்தில் செங்கொடி ஏற்றி லேபர்-கிஸôன் என்று அழைக்கப்படுவதான தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியைத் துவக்கி வைத்தார். தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சங்கச் சட்டம் ஒன்று உருவாக வேண்டும் என்று உழைத்தார் சிங்காரவேலர். இந்தக் கோரிக்கையை இந்திய அளவில் முதலில் எழுப்பியவர் அவரே. இவருடைய முயற்சியின் விளைவாக லண்டன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுவுடைமை வாதியான சக்லத்வாலா பரிந்துரைக்க எம்.என்.ஜோஷி அவர்கள் தொழிற்சங்கச் சட்டம் வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டம் 1926ல் நிறைவேற்றப்பட்டது. இந்தியத் தொழிற்சங்கச் சட்டத்தை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தொழிலாளர்கள் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டார் சிங்காரவேலர். சவஊர்வலத்தில் கலவரம் நடக்கும் என்று எதிர்பார்த்த போலீசார் சிங்காரவேலரை நோக்கித் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன் மார்பை நிமிர்த்திக்காட்டித் தன்னைச் சுடுமாறு சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் சிங்காரவேலர்.
அவர் தலைமையேற்ற தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டமும் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. அது தொடர்பான வழக்கில் கைதாகி 18 மாதங்கள் சிறையில் இருந்தபின் 1930ல் விடுதலையாகி வெளியே வந்தார். அப்போதே அவருக்கு எழுபது வயதாகி இருந்தது. உடல் தளர்வுற்றிருந்தும் இல்லத்தில் அமர்ந்தபடியே பல நூல்களைப் படித்தார். பல இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். தமது வீட்டிலேயே மிகப்பெரிய சொந்த நூலகம் ஒன்றை வைத்திருந்தார் சிங்காரவேலர். அந்த நுôலகத்துக்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு நூலகம் என்று பெயர் வைத்தார். தமிழகத்திலேயே தனிநபரால் நடத்தப்பட்ட நூலகங்களிலேயே அது மிகப்பெரிய நூலகம் என்று குத்தூசி குருசாமி குறிப்பிடுகிறார். பொதுவுடைமை நூல்கள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும் மிகத்தைரியமாக அவற்றை வரவழைத்துத் தன் நூலகத்தில் வைத்திருந்தார் சிங்காரவேலர். திருவிக, ஜீவா அண்ணா போன்ற தலைவர்கள் தங்கள் இளமைக் காலங்களில் அந்த நூலகத்தைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.
1943ம் ஆண்டு ஜøன் மாதம் 20ம் நாள் சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதற்கான கூட்டம் சென்னை செயிண்ட் மேரி ஹாலில் ஏற்பாடாகியிருந்தது. தள்ளாத நிலையிலும் அக்கூட்டத்தில் பெரியாருடன் சேர்ந்து கலந்து கொண்டார் சிங்காரவேலர். 1945ம் ஆண்டு ஜøன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும். அவருடைய தலைமை உரையில் இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களிடையே இருந்து உங்களுடன் ஓருயிராக உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்ன என்று உருக்கமாகப் பேசினார்.
தத்துவமும் வாழ்வும் என்னும் தனது நுôலில் மரணத்தைப் பற்றி ஓர் விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுதிய அந்த மாமேதை 1946 பிப்ரவரி மாதம் 11ம் நாள் இறுதி நித்திரையில் ஆழ்ந்தார்.
தமிழக அரசு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சிங்காரவேலர் மாளிகை என்று பிற்காலத்தில் பெயர் சூட்டி அவருடைய சிலையும் திறக்கப்பட்டது. சென்ற ஆண்டு சிங்காரவேலர் தபால் தலை வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரியில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. இவற்றைத் தவிர சிங்காரவேலர் பொதுவுடைமைக் கட்சியினராலும், தேசிய அளவிலும் எப்போதும் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழனாகப் பிறந்ததற்கு சிங்காரவேலர் கொடுத்த விலை இதுவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
இருக்கும் வரை பொதுவுடைமை பேசிய, அவருடைய மூத்தோர்கள் வழியும் அவர் உழைத்தும் ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு இன்றைய அளவில் சுமார் 200 கோடிகள் இருக்கலாம். அந்தத் திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதி வரை ஏழைத் தொழிலாளிகளுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்காத அந்தக் காலத்தில் தன் மகள் வயிற்றுப் பேரன் சத்தியகுமாரை தத்தெடுத்தார். சத்தியகுமார் இளம் வயதிலேயே இறந்து போனார். அவருடைய மனைவி பத்மா சத்தியகுமார் மற்றும் அவருடைய மகள் பிற்காலத்தில் மிகவும் வறிய நிலையில் வாழ நேர்ந்தது. மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப் பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை சிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதாமாதம் தவறாமல் அனுப்பி வைத்த மிகப்பெரும் உதவித்தொகை ரூ.50.
தற்போது அது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி.
வணக்கம்.

No comments:

Post a Comment