Saturday, June 23, 2007

கோமல் என்னும் மாமனிதர் பாகம் 4


கோமல் என்னும் மாமனிதர் பாகம் 4

ராகவன் தம்பி

கோமலின் இறுதி நாட்களில் அவரைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை என்று எழுதியிருந்தேன்.

இப்போது தேசிய நாடகப் பள்ளியில் பேராசிரியராக இருக்கும் கே.எஸ்.ராஜேந்திரன் ஒரு நாள், '"விஷயம் கேள்விப் பட்டீர்களா? கோமலுக்குப் பாவம் உடம்பு ரொம்பவும் முடியவில்லையாம். புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்களாம். வீட்டுக்குப் போயிருந்தேன். மனிதரைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ரொம்பவும் சிரமப் படுகிறார்'' என்று சொன்னார்.

மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. அன்று இரவு நிறையக் குடித்தேன்.

ரொம்ப வேண்டியவர்களுக்கு இதுபோல ஏதாவது என்றால் இப்போதும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சொல்லப்போனால் ஆறு மாதங்களுக்கு முன்னால் அந்த மனிதரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிப் பார்த்து இருக்கிறேன். இப்படி அவர் ஒரேயடியாக முடங்கிப் போனது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

புற்றுநோயின் தன்மை என்னவென்றால் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கும் வரை ஒன்றும் தெரியாதது போல அது ரொம்பவும் சமர்த்தாக உடலுக்குள் எங்காவது பதுங்கி இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. நோண்டிக் கண்டுபிடித்த அடுத்த நொடி ஆளை விழுங்கத் துவங்குகிறது. ஆளை உருமாற்றுகிறது. பெரும்போரைத் தொடுத்து ஆளை சின்னாபின்னமாக்கத் துவங்குகிறது. கோமலுக்குப் புற்றுநோய் என்றதும் நான் மிகவும் ஆடிப்போனதற்கு எனக்கான சொந்தக் காரணங்களும் இருந்தன.

என்னுடைய தந்தையாருக்குப் புற்றுநோய் நிகழ்த்திய அத்தனை கொடுமைகளையும் பார்த்தவன் நான். என் திருமணம் தொடர்பான சிறு மனத்தாங்கலில் கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் முற்றாகத் தொடர்பை அறுத்திருந்த அவர் என் மகள் பாரதிக்குக் குலதெய்வத்தின் கோயிலில் முடியிறக்க வேண்டும் என்றதும், எல்லாவற்றையும் மறந்து பேத்தியை ஆசையுடன் மடியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதற்கு மறுநாள் சேலத்தில் இருந்து வந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இடியினை இறக்கியது þ அப்பாவுக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று. என் மனைவியை அருகில் அமர்த்தி மிகுந்த மன வேதனையுடன் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். '"என் நிலைமையைப் பார்க்கிறாய் அல்லவா? இவன் சிகரெட் எல்லாம் பிடிக்கிறான். அவனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அதேபோல உத்தியோக உயர்வுக்காகப் படிக்காமல் நாடகம் நாடகம் என்று அலைந்து கொண்டிருக்கிறான். எல்லோரும் கைதட்டிவிட்டுப் போய்விடுவார்கள். என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கிறோம் என்று அவன் தெரிந்து கொள்ளும்போது காலம் மிகவும் கடந்திருக்கும். (எத்தனை தீர்க்கதரிசனம் அவருக்கு!) நீதான் அவனுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். நான் என் அடுத்த பயணத்துக்காகக் காத்து இருக்கிறவன். என்னால் இதைத்தான் சொல்ல முடியும்'' என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் þ தூர நின்று கொண்டிருந்த என் காதுகளிலும் படுவதுபோல. மறுநாள் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துச்செல்லப் பயணமானார்.

எப்போதும் அப்பாவுக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம். நான் எண்பதுகளின் இடையாண்டுகளில் நாடகச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்த நேரம். தில்லியின் பல ஆங்கில தினசரிகளில் என்னைப் பற்றிய கட்டுரைகளும் என் நாடகங்களைப் பற்றிய விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருந்தன. கல்கி, தினமணி, குமுதம் போன்ற இதழ்களும் பல கட்டுரைகளை வெளியிட்டன. ஒரு மாதிரியான மிதப்பில் அவை என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. கட்டுரைகள் வெளிவந்த இதழ்களின் நறுக்குகளை அப்பாவுக்குப் பெருமையாக அனுப்பி வைப்பேன். பதிலுக்கு அவர் நீண்ட கடிதம் எழுதுவார். நாடகம் போன்ற விஷயங்களால் வெறும் பண விரயம்தான் மிஞ்சும் என்றும் முடிந்தால் உத்தியோக விஷயமாக முன்னேற ஏதாவது வழிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருப்பார். அக்கடிதங்கள் மிகவும் எரிச்சல் மூட்டின அப்போது. ஊருக்குப் போகும்போதும் நாடகம் குறித்தோ அல்லது மற்ற சிறுபத்திரிகை நண்பர்களைப் பற்றியோ ஏதாவது சொன்னால் ரசிக்கமாட்டார். முகத்தை மிகவும் வேதனையாக வைத்துக்கொள்வார்.

அப்பா அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதும் நான் சிறிது நாட்கள் சென்னையில் தங்கினேன். வேளச்சேரியில் இருந்த சகோதரர் வீட்டில் இருந்து காலையில் மருத்துவமனைக்குப் போய்விடுவேன். அப்பாவுக்குப் புற்றுநோய் தொண்டைப் பகுதிக்கு மேலும் பரவி பேச முடியாத நிலையில் இருந்தார். வெஸ்ட் இன்டீஸ் நாட்டில் மருத்துவராகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் என்னுடைய சகோதரரும் அப்போது வந்திருந்தார். ஒரு நாள் நான் மட்டுமே அப்பாவுடன் தனியாக அறையில் இருந்தேன். செவிலியர்கள் வந்து அப்பாவை ஏதோ பரிசோதனைக்காக ஒரு தள்ளுப்படுக்கையில் வைத்து அழைத்துப்போனார்கள். நான் அவர் அறையில் தனித்திருந்தேன். படுக்கை விரிப்புக்களை மாற்றுவதற்காகக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை மாற்றுவதற்காகத் தலையணையை நகர்த்தியபோது.... தலையணையின் அடியில் நான் முன்னர் அனுப்பி வைத்திருந்த அத்தனை பத்திரிகை நறுக்குகளும் புகைப்படங்களும் கட்டுக்கட்டாக அங்கு இருந்தன. ஆடிப்போனேன். அந்த அறையைக் கவனித்துக்கொள்ளும் செவிலி, '"பெரியவர் எப்போதும் இதையே எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருக்கும். இப்படியெல்லாம் செய்து உடம்பைக் கùலிடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கூட சில சமயம் அவரை அதட்டியிருக்கிறேன்'' என்று சொன்னபோது உடைந்து போனேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கரைந்து கரைந்து அழுதேன். இப்போதும் பல நேரங்களில் அக்கணத்தினை நினைவுக்குக் கொண்டு வரும்போதெல்லாம் கட்டுப்படுத்தமுடியாமல் எனக்கு அழுகை வரும்.

எனவே கோமலுக்குப் புற்றுநோய் என்னும் செய்தி என்னை மிகவும் பலமாகத் தாக்கியது. நிலைகுலைய வைத்தது. அவர் உடல்நிலை சரியில்லாத நேரம், சி.சு.செல்லப்பாவுக்கு விளக்கு விருது கொடுத்தார்கள். அந்த விழாவில் நான் இயக்கிய, செல்லப்பாவின் "முறைப்பெண்' நாடகம் மேடையேற வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார் கோமல். அவரைப் பார்க்கச் செல்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று சொல்லும்போதெல்லாம் நெகிழ்ந்து போய்விடுவேன். வெங்கட்சாமிநாதனும் தன்னுடைய கட்டுரை ஒன்றில் இது குறித்து எழுதியிருப்பார். தாளாத உடல்வேதனையிலும் முறைப்பெண் நாடகம் பற்றிய தன் அக்கறையை அனைவரிடமும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார் கோமல். ஒன்று சி.சு.செல்லப்பா மீது அவர் கொண்டிருந்த அதீதமான மரியாதை. இன்னொன்று என் மீது அவர் வைத்த நம்பிக்கை. அன்பு. சென்னைக்கு வேறு வேலையாகப் போனேன். தனியாகப் போயிருந்தேன். கோமலைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனது துடித்தது. தில்லியில் எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். சென்னை சென்று கோமலைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று. சென்னையில் திலீப்குமாரையும் மற்ற நண்பர்களையும் சந்தித்தேன். நண்பர்கள் அனைவரும் கோமலின் மிகவும் சீர்குலைந்து போயிருந்த உடல்நலம் பற்றிச் சொன்னார்கள். கோமலைப் பார்க்க எனக்கு தைரியம் இருக்குமா என்று தெரியாமல் இருந்தது. அவருடைய வீடு இருக்கும் தெரு செல்லும் வரை சென்றேன். மனதுக்கு மிகவும் கிலேசமாக இருந்தது. நிற்க முடியாமல், உட்கார முடியாமல், படுகóக முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அவரை எப்படிப் பார்க்கப்போகிறேன்?

கொஞ்சமாகக் குடித்து விட்டுச் சென்றால் கொஞ்சம் தைரியம் வரும் என்று தோன்றியது. கோமல் குடியிருந்த தெருவின் முனையில் இருந்த மதுக்கடைக்குச் சென்று கொஞ்சம் குடித்தேன். கொஞ்சம் குடித்ததும் அச்சமும் அதைரியமும் இன்னும் அதிகமானதுபோல இருந்தது. சரி. இன்னும் சற்றுக் குடிக்கலாம் என்று தொடர்ந்தேன். குடி என் தைரியத்தை முற்றாக இழக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பாவின் ஞாபகம் அதிகரித்தது. இன்னும் குடித்தேன்.

குடிபோதை வழிந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போக முடியாது. நாகரிகமாகவும் இருக்காது. போகாமலிருக்க எனக்கு சாக்குக் கிடைத்து விட்டது. ஐந்து வீடுகள் தள்ளியிருந்த கோமல் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து மேற்கு மாம்பலத்திலிருந்து தாம்பரம் சென்று நண்பனின் அறையில் அந்த இரவைக் கழித்தேன்.

மறுநாளும் ஏறத்தாழ இதே கதைதான். அவரை சந்திக்கும் தைரியம் ஏனோ எனக்கு முற்றாக வரவில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேற்கு மாம்பலம் வரை சென்று மீண்டும் அதே மதுக்கடையில் அதே போல குடித்துவிட்டு மீண்டும் தாம்பரத்தில் அதே நண்பனின் அறையில் இரவைக் கழித்து விட்டுக் காலையில் வேளச்சேரி அண்ணன் வீட்டுக்குப் போனேன்.

கோமலை சந்திக்காமலேயே மறுநாள் தில்லிக்கு ரயில் ஏறினேன். '"அவர் வீட்டுக்குப் போயிருந்தீர்களா?'' என்று என் மனைவி கேட்டதற்கு, '"நான் போன நேரம் அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துப் போயிருந்தார்கள். அதனால் அவரை இந்தத் தடவை பார்க்க முடியாமல் போனது'' என்று அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்காது பொய் சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தேன். எஸ்.கே.எஸ்.மணியும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். ""என்னடா, சென்னையிலே அவரைப் பார்த்தியா? எப்படி இருக்கார்? உன்கிட்டே எதுனா பேசினாரா?'' என்று அடுக்கிக் கொண்டே போவார். அவருக்கும் அதே பொய்கள்.நான் தில்லி வந்த சில நாட்களில் கோமல் இறந்து போனார். யதார்த்தாவின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்தோம், பல நண்பர்கள் உருக்கமாகப் பேசினார்கள். தில்லியில் கோமலுக்குப் பல நண்பர்கள் உண்டு. அனைவரும் கோமலுடன் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பேசிக்கொண்டோம்.

கோமலுக்குப் பிறகு அவருடைய சுபமங்களா நின்ற போனது. அவருக்குப் பிறகு நாடக விழாக்கள் எதுவும் தமிழகத்தில் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. ஒன்றிரண்டு விழாக்களை யாராவது நடத்தியும் இருக்கலாம்.தமிழ்ப்படைப்புலகம் மிகவும் துரதிருஷ்டம் பிடித்த ஒன்று. அதனால் மேன்மைகளை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. பல உதாரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தகப்பனின் திவசம் அமர்க்களமாக நடக்கும்போது, தகப்பன் இருந்திருந்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பானே என்று அசட்டுத் தனமாக அழும் மகனின் நிலையில் நான் இன்று இருக்கிறேன்.

கோமல் தமிழுக்கு நிறைய செய்தார். நாடகத்துக்கு நிறைய செய்தார். அவர் இருந்திருந்தால் பல மாயங்களை நிகழ்த்தியிருப்பார். நாடக மூலவர்களும் உற்சவர்களும் இருக்கும் இடம் தெரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். பல போலிகளின் நிஜமான சாயம் வெளுத்திருக்கும்.

எல்லாவற்றையும் விட, நமக்கு வேண்டிய நாடகம், நமக்கு வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத் நமக்குத் தெளிவாக எடுத்து வைத்திருப்பார்.

மனம் நெகிழ்ந்த நினைவுகளுடன் கோமல் பற்றிய என் நினைவலைகளைத் தற்போது நிறுத்திக் கொள்கிறேன் அவரைப் பற்றிய நினைவுகளை என்றும் மனதில் சுமந்து...

No comments:

Post a Comment