Saturday, June 23, 2007

முரண் - மொழிபெயர்ப்பு சிறுகதை




வங்காள மூலம் - சுனில் கங்கோபாத்யாய்

ஆங்கிலம் வழி தமிழில் - ராகவன் தம்பி


ஓவியங்கள் - வெ.சந்திரமோகன்

வெ.சந்திரமோகன் - கவிஞர் - ஓவியர். வடக்கு வாசல் இதழ்களில் இவருடைய கவிதைகளும் ஓவியங்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.





சுனில் கங்கோபாத்யாய் சாகித்ய அகாடமி விருது பெற்ற வங்க எழுத்தாளர் - கவிஞர். வங்காள இலக்கியத்தில் பல ஆண்டுகளாக மிகுந்த தாக்கம் செலுத்தி வருபவர்.

எவ்வித பயமும், மரியாதையும் இன்றி கதவை நெட்டித் தள்ளி தடாலென்று உள்ளே பிரவேசித்தான் தபன். மேனேஜருடைய அறையின் கதவருகில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருக்கும் காவலாளியால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. மேனேஜர் சற்று பதட்டத்துடனும் கடுஞ்சீற்றத்துடனும் சட்டென இவனை நிமிர்ந்து பார்த்தான். தபன் அதைச் சட்டை செய்யாமல் நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் மேல் ஒரு காலை ஊன்றிக் கொண்டு மிகவும் காட்டமாக வெடித்தான்.


நேராகவே விஷயத்துக்கு வருவோம். என்ன சொல்லணும் உனக்கு?"


மேனேஜர் அவனை மிகவும் நிஷ்டூரியமாகப் பார்த்தான்.""எனக்குச் சொல்ல என்ன இருக்கு? கடிதாசியை குடுத்திருப்பாங்களே...





தட்டச்சு செய்யப் பட்ட காகிதத்தை சட்டைப் பையிலிருந்து உருவி எடுத்த தபன், அதைக் கசக்கிப் பந்தாகச் சுருட்டி மேனேஜரின் மூக்கைக் குறி பார்த்து அவன் முகத்தின் மீது எறிந்தான். அது ஒரு அங்குலம் குறி தவறி மேனேஜரின் காதை உரசிச் சென்றது. மிகுந்த திகைப்புடன் அவனை முறைத்துப் பார்த்தான் மேனேஜர்.""என்னய்யா இது? ஏன்யா என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கே நீ?""""என்ன பண்றேன்னு உனக்குத் தெரியலையா? நீ என்ன வேணும்னாலும் கிறுக்கி அனுப்பினா அடுத்தவன் உனக்குப் பயந்து மூடிக்கிட்டு இருப்பான்னு நினைப்பா உனக்கு?'' ""தோ பார் தபன் பாபு, ஆபீசுக்குன்னு சில ஒழுங்கு முறைகள் இருக்கு. என்னைக் கேட்காம இப்படி திடுதிப்புனு என் ரூமுக்குள்ளே நாய் நுழையற மாதிரி நுழையறது கொஞ்சம் கூட நல்லாயில்லே''.""தேவடியா மகனே. இந்த ஆபீஸ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்துன்னு உனக்கு நினைப்பா? இங்கே நீயும் என்னை மாதிரி ஒரு வேலைக்காரன் தான். உன் அதிகாரத்தை யெல்லாம் யார் கிட்டே காண்பிக்கிறே நீ?மேனேஜர் மேஜை மேல் இருந்த மணியை அடித்தான். தபன் சடாரென்று மேஜையை சுற்றி வந்து பக்கத்தில் நின்று கொண்டான்.""என்னை என்ன பயமுறுத்தலாம்னு பார்க்கிறியா? இந்த சலசலப்புக்கெல்லாம் அசரமாட்டேன். உன் தடியன்களை கூப்பிடேன். நான் ஏற்கனவே உன் வேலையைக் காறித் துப்பி தொடச்சி எறிஞ்சாச்சு தெரியுமா உனக்கு?""தயவு செய்து வெளியே போறியா? நான் இப்போ வேலையா இருக்கேன்''.""சரிப்பா. நான் போறேன். என் மூஞ்சை திரும்பப் பார்க்கற சங்கடமெல்லாம் உனக்கு வேணாம். இப்போவே போயி கங்கையிலே ஒரு முழுக்குப் போட்டுத்தான் வீட்டுக்குப் போவேன். வாழ்க்கை பூரா சனியன் பிடிச்ச இந்த வேலையிலே எழவெடுத்தாச்சு. தினம் ஏதோ சாக்கடையிலே முங்கி முங்கி எழுந்த மாதிரி அருவெருப்பா இருக்கு. எல்லாம் கள்ளச் சந்தை வியாபாரம்... பொய்... பித்தலாட்டம்...மேனேஜரால் இனியும்
கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.



""இப்போவே இந்த இடத்தை விட்டுப் போறியா இல்லையா?'' என உரத்த குரலில் கத்தினான்.தபன் மேஜை மேலிருந்த கனமான பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்துக் கொண்டு ருத்ராகாரமாக சிவந்த விழிகளை உருட்டிக்கொண்டு நின்றான்.





"வாயை மூடு. இப்படிக் கோபத்தைக் காண்பிக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். அடிச்சிக் கூழாக்கிடுவேன் தெரிஞ்சுக்கோ.''என்ன? இப்படியா? இல்லை. இப்படியெல்லாம் இல்லை. தபனால் இப்படியெல்லாம் செய்யமுடியவில்லை.""எங்கே போகணும் சார்? ராம்சந்த் அவனைக் கேட்டான்.''""ஜெனரல் மேனேஜர் ஐயாவைப் பார்க்கணும்'' தபன் மிகவும் பவ்யமாக பதிலளித்தான்.






ராம்சந்த் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவனை அலட்சியப்படுத்தி விட்டு மேனேஜரின் அறைக்குள் நுழைந்தான் தபன்.மேனேஜர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.



"சொல்லு''



"சார்... உங்க லெட்டர் கெடச்சுது.



"அப்படியா? நீ என்ன சொல்லணுமோ சொல்லு. ஆனா ஒண்ணு மட்டும் மனசுலே வெச்சுக்கோ. நீ சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் எழுதித்தான் குடுக்கணும். உன் மேலே ரொம்ப கடுமையான புகார்கள் இருக்கு.''தபனுக்கு இந்த ஆளை கண்ணோடு கண் பார்த்துப் பேசும் தைரியம் என்றும் இருந்ததில்லை. ஆனால் இன்று அவனுள் எவ்வித பயமும் இல்லை.



மிகச்சாதாரணமான குரலில் "சார்... ஒரே வார்த்தைதான் என் பதில். எனக்கு இந்த வேலையை விட்டுத் தொலைக்கணும்.''



ஜெனரல் மேனேஜர் அவ்வளவு சுலபத்தில் ஆச்சரியப்பட்டுப் போகிறவன் இல்லை. ஆனால் இதில் அவன் கூட ஆடிப்போய் விட்டான் என்றுதான் சொல்லவேண்டும். ஏதோ ஒரு சுண்டெலி, தடித்த ஒரு கடுவன் பூனையைத் தாக்கத் துரத்தி வருவதுபோல உணர்ந்தான் அவன்.



"உனக்கென்ன இந்த வேலையை உடணும். அவ்வளவுதானே? நல்லது. ரொம்ப நல்லது. உன்னை வேறே எங்கேயாவது வேலைக்குக் கூப்பிட்டு இருக்காங்களான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?



"இல்லை''



"அப்புறம்?'



"நான் போறேன். அவ்வளவுதான்.'' சரிதான். உனக்கு ஏத்தம் ரொம்பத்தான் கூடிப்போச்சு.'



"இது ஏத்தம் கிடையாது சார். மனசாட்சிப்படி நடந்துக்கிறேன் அவ்வளவுதான். என் பிழைப்புக்கு இந்த வேலை தேவையாயிருந்தது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு மாசமும் என் சம்பள செக் வாங்குறப்போ எல்லாம் எனக்குக் குமட்டிக்கிட்டு வந்தது தெரியுமா?'



"ஓஹோ. நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன் தபன் பாபு.''



"அது பரவாயில்லே சார். ஆனால் நான் சொல்றதை நீங்க கொஞ்சம் கேட்டுத்தான் ஆகணும். இந்த வேலையை விட்டுத் தொலைக்கறது பத்தி எத்தனையோ மாசங்களா நான் யோசிச்சதுதான். ஒரு வழியா இப்போ ஒரு முடிவெடுத்துட்டேன். எனக்கு மகா சந்தோஷமாயிருக்கு. இந்தத் தீர்மானத்துக்கு வர்றதுக்கு முந்தி ஒரு மாதிரி சுத்திச் சுத்தி அடிச்சது. போயும் போயும் என்ன மாதிரி ஆபீஸ் இது? இங்கே என்ன பண்ணாலும் மனசாட்சியைக் கொன்னுட்டுத்தான் பண்ண வேண்டியிருந்தது. எல்லாம் அக்கிரமமான காரியங்கள். கோடிக் கணக்குலே அரசாங்கத்தை ஏமாத்தறதுக்கு ரெண்டு வகையான அக்கவுண்ட் புத்தகங்களை வச்சிக்கிட்டிருக்கீங்க. சொல்லப்போனா இந்த தேசத்துக்கு மிகப்பெரிய துரோகத்தைப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.'



"தபன் பாபு, உன்னோட சொற்பொழிவை இங்கே ஏன் குடுத்துக்கிட்டு இருக்கே? எனக்கு வேலை எக்கச்சக்கமா இருக்குப்பா.''



"குறுக்குலே பேசக் கூடாது. நான் சொல்ல வந்ததை சொல்லியே ஆகணும். அந்தக் குழந்தை பால் பவுடரை வெலை ஏத்தறதுக்காக, ஒரு ரெண்டு வாரத்துக்கு மார்க்கெட்லேயே இல்லாம போக்கடிச்சீங்க இல்லே?''



"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. அதெல்லாம் கொஞ்சம் சிக்கலான காரியம்...''



"ஓஹோ. எனக்கு எல்லாம் தெரியும். ஆனால் நான் சொல்லப்போற ஒரு விஷயத்தை நீங்க மனசுலே எடுத்துக்கணும். நீங்களும் இங்கே என்னைப் போல ஒரு வேலைக்காரர்தானே. உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வருது? ஒரு ரெண்டாயிரம்? ரெண்டாயிரத்து ஐந்நூறு? இதுக்காக. உங்க ஊழல் புடிச்ச முதலாளிகளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அவனுங்களுக்கு சேவகம் பண்றதாலே இந்த தேசத்தைக் குட்டிச்சுவராக்கறீங்க. எத்தனையோ ஆயிரக்கணக்கான அறியாக் குழந்தைகளைப் பட்டினி போட்டு வதைச்சிக்கீங்க...''இந்த இடத்தில் மேனேஜர் அழைப்பு மணியை ஓங்கி அடித்தான். தன்னுடைய முழு உடம்பும் முறுக்கேறுவதையும், விழிப்புடனும், உயிர்ப்புடனும் நரம்புகள் துடிப்பதையும் உணர்ந்தான் தபன். எந்த விதமான அவமதிப்பையும் இகழ்ச்சியையும் அவன் சகித்துக் கொள்ளப்போகும் நாள் இதுவல்ல. ராம்சந்தர் அறைக்குள் பிரவேசித்து மானேஜரின் ஆணைக்காகக் காத்திருந்தான். மேனேஜர் தபனை முறைத்து விட்டுப் பிறகு தன்னுடைய பார்வையை ராம்சந்தர் மீது செலுத்தினான். எரிச்சலான குரலில்,



"போய் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா''. ராம்சந்தர் அறையை விட்டு வெளியேறியதும், மேனேஜர் தபனிடம்,



"உன்னுடைய டிஸ்சார்ஜ் ஆர்டர் நாளை உனக்குக் கிடைக்கும். அடுத்த வாரம் வந்து நீ உன்னுடைய சம்பள பாக்கியை கேஷியரிடம் வாங்கிச் செல்லலாம். ஆனா இப்போ நீ போகலாம்''.



"எனக்குச் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கு.''



"இருக்கலாம். ஆனா கேக்கறதுக்கு எனக்கு நேரம் கிடையாது. பியூனைக் கூப்பிட்டு உன்னை வெளியே தூக்கிப் போடற மாதிரி வச்சுக்காதே.'



"என்கிட்டே அப்படிப் பேசற வேலையெல்லாம் வெச்சிக்க வேணாம் தெரியுதா? நான் ஒண்ணும் உங்க அடிமை கிடையாது.''இப்போது காட்சி ரொம்பவுமே வேறு மாதிரி.தபன் மானேஜரின் அறைக்கு முன்னே குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்தான். ராம்சந்த் வாயில் வழியும் புகையிலைச் சாற்றுடன் தன்னுடைய ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு தூங்கி வழிந்து கொண்டிருந்தான். தபன் ஓரிருமுறை அவனை நோக்கி மெல்ல அடிவைத்து நெருங்கிச் சென்று பிறகு பின்வாங்கினான். இறுதியாக அவனுக்கு மிக அருகில் வந்து, மிகவும் மெதுவாக...



"ராம்சந்தர்...''ராம்சந்தர், கண்ணைக்கூடத் திறந்து பார்க்காமல் அலட்சியத்துடன் "அவரை நீ இப்போ பார்க்க முடியாது.''



"பரவாயில்லே. நான் உனக்கு கொஞ்சம் நல்ல சேதி வச்சிருக்கேன். உன்னுடைய யூனிபாரம் அலவன்ஸ் சாங்ஷன் ஆயிடிச்சி.''



"ஆயிடிச்சா?'' ராம்சந்தர் கண்ணைத் திறந்தவாறு கேட்டான்."



"ஆமாம். ஒவ்வொரு வருஷமும் உனக்கு ஒரு காக்கி சட்டை வாங்க ஐம்பத்து நாலு ரூபாயும் பித்தளை பக்கிள்சோட பெல்டும், ஒரு ஜோடி ஷøவும் உனக்கு சாங்ஷன் ஆயிருக்கு.''இந்த முக்கியமான விஷயத்தை ராம்சந்தருடன் விவாதித்தவாறு இன்னும் கொஞ்சம் நேரம் கழிந்தது. பிறகு தபன் அவனை மிகவும் பொருள் பொதிந்த பார்வையோடு உற்று நோக்கி.""பாஸ் உள்ளே இருக்காரா?''""இருக்காரு. ஆனா ரொம்ப பிஸியா இருக்கார். இப்போ அவரைத் தொந்தரவு பண்ண முடியாது.''



"என்னப்பா ராம்சந்தர். உனக்குத் தெரியும். நான் மேனேஜர் சார் கிட்டே ஒண்ணு அல்லது ரெண்டு நிமிஷம் மட்டுமே பேசணுமப்பா. உனக்குத் தெரியாததா?''ஆனால் அந்த ஓரிரு நிமிடங்களும் தபன் வெறுமனே அமைதியாக மட்டுமே கழிக்க முடிந்தது. மேனேஜர் ஏதோ கோப்பினைப் படிப்பதில் தீவிரமாக மூழ்கி இருந்தார். தபன் உள்ளே வந்ததையே அவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.தபன் பளுவைத் தன்னுடைய ஒரு காலில் இருந்து இன்னொரு காலுக்கு மாற்றியவாறு கால் மாற்றி நின்றான். பிறகு மிக மெல்லிய குரலில் பேசத்துணிந்தான்."



"சார்''



"ஏம்பா இப்படி நின்னுக்கிட்டிருக்கே? உட்காரு.'' அவன் உட்கார முயற்சித்தபோது, மேனேஜர் தன்னுடைய சுருட்டை மீண்டும் பற்றடித்துக் கொண்டு புகை மூட்டத்தை வெளியில் தள்ளியவாறு



"இப்போ சொல்லு. உனக்கு என்ன வேணும்?'



'தபன் அந்த மேஜையை இன்னும் சற்று நேரம் தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு முகத்தை நிமிர்த்தி, முன்புறம் சாய்ந்தவாறு."



"சார், இந்தத் தடவை என்னை மன்னிக்காவிட்டால்...''



"என்ன எழவுய்யா? உன்னை எதுக்கு மன்னிச்சித் தொலைக்கணும்?''



"சார், எனக்கு அந்தக் கடுதாசி முந்தாநாள் கிடைச்சது.''



"ஓ... இப்போ ஞாபகத்துக்கு வந்தது. உனக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இன்னும் அதுக்கு பதிலை நீ ஏன் குடுக்கலை? நாற்பத்தியெட்டு மணிநேரத்துக்குள்ளே அதுக்கு பதிலைக் குடுத்திருக்கணுமே...''



"ஆனா அதுக்குத்தான் உங்களை இப்போ பார்க்க வந்ததே சார். என்ன எழுதணும்னு உங்ககிட்டே அட்வைஸ் கேட்டுக் கலாமேன்னுதான்...''



"இங்கே அட்வைஸ் பண்றதுக்கெல்லாம் இடம் கிடையாது. இந்தத் தடவை உன் வேலையை நீ தக்க வைச்சக்க முடியவே முடியாதுப்பா. உனக்கு நிறைய பண்ணியாச்சு. ஆனா உன்னுடைய வேலையிலே அடிக்கடி தவறு நேர்ந்து, முக்கியமான பேப்பர்களை எல்லாம் அங்கங்கே போக்கிட்டு, எந்த ஒரு தகவலும் இல்லாமே ஒரு வாரம் ரெண்டு வாரம்னு காணாமப் போறது... சரி, ஒரு கம்பெனி எத்தனைதான் பொறுத்துக்கும்?''



"சார்... எனக்கு உடம்பு முடியாம இருந்தது. அதுக்குத்தான் என்னாலே வேலைக்கு வர முடியாம போச்சு சார்...



"ஒரு மாசத்துலே நீ எட்டு நாள் பத்து நாள்னு சீக்கா இருந்தேன்னா இந்த வேலையை விட்டுட்டு முழுசா ஒரு மெடிக்கல் செக்கப் செய்துக்கோன்னுதான் என்னாலே சொல்லமுடியும்...''



"ஆனா இந்த வேலையை விட்டா நான் எப்படி பிழைப்பேன் சார்? என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கு. என்னோட தகப்பனாரும் ரிடையராயிட்டார்''



"சரி. அதுக்காக நீ ஆபீஸ்லே செய்ய வேண்டிய வேலையையும் செய்யாம காலம் தள்ளிடலாம்னு பாத்தியா? ஆபீûஸ என்ன மடம்னு நினைச்சிட்டியா? வேலை கிடைக்காமெ அலையற சின்னப் பசங்களை பாரு. வேணாம். தபன் பாபு வேணாம். நீ இனிமேல இங்க இருக்க முடியாது. வேறே எங்கேயாவது ஒரு வேலையைத் தேடிக்கோ.''



"ஐயோ சார்... தயவு செய்து... தயவு செய்து என்னுடைய நிலைமையை மனசுலே வச்சிக்குங்க சார். இப்போ எனக்கு வேலை போச்சின்னா நாங்க எல்லோருமே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். எனக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம்தான் சார் ஆகுது''""தம்பி... அப்படின்னா நீ இன்னும் முனைஞ்சி வேலை செய்திருக்க அதுவே காரணமா இருந்திருக்கணும். ஆனா நீ ஒரு வருஷமா தேனிலவு மட்டுமே கொண்டாடிக்கிட்டு இருக்கே. எல்லாம் உனக்கு கம்பெனி செய்து குடுக்கணும்னு எதிர்பார்க்கிறியா? அது ஒருக்காலும் நடக்காது தெரிஞ்சக்கோ.''""சார்...என் பொண்டாட்டி சீக்காளி...''



"யோவ்... நீ ஒரு உருப் படாத பித்தலாட்டக்காரன். வாயைத் தொறந்தா பொய்தான். போன மாசம்தான் உன்னை உன் பொண்டாட்டியோட மெட்ரோ சினிமா தியேட்டர் வாசல்லே பார்த்தேன். அவளை நீ எனக்கு அறிமுகம் கூட செய்து வெச்சே. அவ நல்லாத்தானே இருந்தா? அழகா... வாட்டசாட்டமா... இப்போ அவளை சீக்காளி ஆக்கிட்டியா?''""சார்... அவளோட வியாதியை நீங்க மேலோட்டமா வெளியிலிருந்து பார்க்க முடியாது சார்...''



"எனக்குப் புரியுது. உங்க யூனியன் லீடர் கூட உன்னை முழுக்க ஒரு பிரயோசனமேயில்லாத ஆளுன்னு ஏன் ஒத்துக்கிறான்னு இப்பத்தான் புரியுது.''



"அவங்க அப்படித்தான் சார் சொல்வாங்க. ஏன்னா நான் அவங்க மீட்டிங் எதுக்கும் போனதில்லே.''



"அது கிடக்கட்டும். நீ போனியா இல்லையான்றது எனக்குத் தேவையில்லே. ஆனா தபன்பாபு... என்னை மன்னிச்சிக்கோ. என்னாலே எதுவும் செய்ய முடியாது. உன்னுடைய டிஸ்மிஸ் லெட்டரை ஏற்கனவே டைப் செய்தாச்சு.''



தபன் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தான். அவன் முகம் இரத்தமிழந்து வெளுப்படையத் துவங்கியது.சடாரென்று அவன் மேஜையின் இந்தப்புறமாக வந்து நின்று மேனேஜரின் இரு கரங்களையும் இறுகப்பற்றிக் கொண்டான்."



"சார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்னை அழிச்சிடாதீங்க. எனக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக் குடுங்க.''



"அடக்கடவுளே, என்னய்யா பண்றே? தயவு செய்து இதெல்லாம் வேணாம். நானும் உன்னை மாதிரி ஒரு வேலைக்காரன்தான் இங்கே. தன்னுடைய வேலைகளைப் பார்த்துக்கறதுக்காக கம்பெனி எனக்கு சம்பளம் குடுக்குது அவ்வளவுதான்.''



"சார் எல்லோருக்கும் தெரியும். நீங்க எவ்வளவு நல்லவர்னு. என்னை இப்படி நாசமாக்கிடாதீங்க சார். இப்போ இருக்கிற சூழ்நிலையிலே என்னாலே இன்னொரு வேலையைத் தேடிக்க முடியாது சார். நாங்க பட்டினி கிடந்து சாகறதுதான் ஒரே வழி சார். எனக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தயவு செய்து குடுங்க சார். இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு சார்...''



"என்ன? நான் உனக்கு வாய்ப்புக் குடுக்கணுமா? அப்படி வாய்ப்புக் குடுத்தா நீ திருந்திடுவியா?''""முயற்சி பண்ணிப் பாருங்க சார். இன்னொரு தடவை மறந்து கூட தப்பு செய்யமாட்டேன் சார். எப்பவுமே இனி தப்பு செய்யமாட்டேன் சார்.'' "



"தோ பாரு. நான் யாரையும் இப்படி வேலையை விட்டு தூக்கிறதுலே எனக்கு ஒண்ணும் சந்தோஷமோ பெருமையோ இல்லே. ஆனா தான தருமத்தின் அடிப்படையிலே ஒரு கம்பெனியை நடத்த முடியாது. சரி. அந்த மெமோவை நான் ஒரு நிமிஷம் பார்க்கிறேன்.''



தபன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து அதனை எடுத்து மேனேஜரிடம் கொடுக்க அவன் அதை வாங்கி சிகப்புப் பேனாவினால் பரபரப்புடன் எதையோ எழுதினான். அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த தபனின் முகம், சந்தோஷத்தாலும் நிம்மதியாலும் பிரகாசித்தது. உணர்ச்சியில் அவனுடைய குரல் கனத்தது."



"சார், சத்தியமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார்.''



"உன்னுடைய நன்றியை உன்கிட்டேயே வச்சுக்கோ. போய் வேலையை ஒழுங்கா பார்க்கிற வழியைப் பாரு.''



"அந்த அறையை விட்டு வெளியேறும்போது கூட தன்னுடைய உடல் மிகவும் கடுமையாக நடுங்குவதைக் கவனித்தான் தபன். ஏதோ சாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து வந்ததைப் போல உணர்ந்தான். ஒரு அபரிமிதமான கிளர்ச்சி பலரையும் டாய்லெட்டை நோக்கி உந்தித் தள்ளும். தபனுக்கும் அதே உணர்வும் தேவையும் இருந்தது. அவன் ஆண்கள் கழிப்பறையை நோக்கி எட்டி நடைபோட்டுக் கொண்டிருந்தான். பிறகு வழியெல்லாம் மீண்டும் மீண்டும் எச்சில் துப்புவதற்குத் தூண்டப்பட்டுக் கொண்டிந்தான். அவனுடைய வாயிலிருந்து ஏதோ ஒரு முடிவேயில்லாத வற்றாத ஜீவ ஊற்று கிளம்பியதைப்போல எச்சில் ஊறிக்கொண்ட இருந்தது. எவ்வளவு துப்பினாலும் அது தன்னை விட்டு நீங்கியதைப் போல அவனால் உணரமுடியவில்லை.கழிப்பறையில் சுமாரான அளவில் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி இருந்தது. அது நட்ட நடுவில் விரிசல் விட்டிருந்தது. ஆனால் அதை மாற்றும் அக்கறை யாருக்கும் இருக்கவில்லை. தபன் விரிசல் பட்ட தன்னுடைய முகத்தை மிகக் கூர்மையாக உற்று நோக்கி கொண்டிருந்தான். இறுதியாக அவன் வாயில் வற்றாது ஊறிக்கொண்டிருந்த எச்சிலை ஓங்கரித்து அவனுடைய விரிசல் பட்ட முகத்தின் மீது மிகுந்த ஓசையுடன் காறித் துப்பினான்.



***************************************************************************



1 comment:

  1. :-))
    அவர் எழுதின கதை உங்க 'பெயருக்கு' (யதார்த்தா) பொருத்தமா இருக்கு!

    ReplyDelete